// this goes in body tag

Sunday, May 15, 2005

குமுதினி படுகொலை

நெடுந்தீவு !

அதுயாழ் குடாநாட்டின் நகர மையத்திற்கு மேற்கே 34 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒரு அமைதியான தீவு. 10 சதுர மைல்கள் பரப்பினைக் கொண்ட தீவில் 1955ம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் பிற இடங்களில் இருந்து குடியேறி தமது வாழ்வினை ஆரம்பித்தனர். இப்போது பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களையும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் கோரமான பதிவுகளையும் தன்னுள் சுமக்கிறது.

பொதுவாக இங்கு வாழும் மக்கள் தமது வாழ்வோடு ஒன்றித்துப்போன தேவைகள் சார்ந்தவற்றில் தன்னிறைவு கொண்டிருக்கவில்லை. தேவைகளின் பெரும்பாலானவை யாழ்குடா நாட்டுடன் தொடர்பு பட்டிருந்த தீவகத்தின் குறிகட்டுவான் எனும் இடத்திற்கு சென்று நிறைவு செய்தனர்.

தீவையும் குறிகட்டுவானையும் பிரித்து இருந்த ஒன்பது மைல் தொலைவு கடலாகியிருந்ததால் தீவுக்கான அனைத்து தொடர்புகளும் கடல் மார்க்கமாகவே நிகழ்ந்தது.

மக்கள் தமது அன்றாட கடல் மார்க்கமான போக்குவரத்து 'குமுதினி" என்ற பெயர் கொண்ட படகு மூலமே மேற்கொண்டனர்.

குமுதினி....! தீவு வாழ்மக்களின் வாழ்வோடு ஒன்றித்துப்போன ஒரு இணைபிரியா அம்சமாகிப் போயிருந்தது. நாளுக்கு இரண்டு தடவை தீவின் மக்களை சுமந்து செல்லும் குமுதினி தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாக உயர்ந்து நின்றது. அன்று தீவின் மக்களுக்காக வாழ்ந்த குமுதினி இன்று அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியாகி உயர்ந்து நிற்கிறது.

15.05.1985 .......!

அன்றுதான் தீவு பூபாளத்தின் இனிமையை இறுதியாக சந்தித்தது. அதன் பின்பு வந்தவைகள் எல்லாம் சோகத்தின் முகாரியாகவே கழிந்தது. அன்றைய காலைப் பொழுதில் குமுதினியும் வழமை போன்று தனது பணிக்கு தயாராகியது. எப்போதும் போலவே எதிர்பார்ப்புகளாலும் தம்மைச் சுற்றிய நினைவுகளாலும் மனங்களை நிறைத்த மக்கள் கூட்டம் குமுதினியையும் நிறைத்தது.

நேரம் காலை ஏழுமணியினைக் கடந்து கொண்டிருந்தது. காலைப் பொழுதின் இனிமை கடற்காற்றின் இதம் கடல் நீரின் உப்புச்சாரல் எல்லாமே ஒன்றாகி மனதின் உணர்வுகளை மென்மையாக்கி நினைவுகளை அகல விரித்தது. இயற்கையின் அரவணைப்பில் சுயத்தின் சோகங்கள் தற்காலிகமாகவேனும் மறந்து இருந்தனர் மக்கள். ஆனால் அந்த அமைதி நீடிக்கவில்லை.அமைதியைக் குலைத்து இறங்கு துறையினை வந்தடைந்த படையினர் குமுதினியை சல்லடை போட்டுத் தேடினர். பயணிகள் கடுமையான விசாரணைக்குள்ளாகினர். சற்று நேரத்தின் முன்பு நிலவிய அமைதி இப்போது பதட்டமாக மாறியது.

முன்பு பல தடவை இத்தகைய கசப்பான அனுபவப் பதிவுகளுக்கு சொந்தமாகிப் போனவர்கள். பழையனவற்றுடன் இதனையும் வரவு வைத்துக் கொண்டனர்.ஆனால் அன்றைய நிகழ்வு மாறானதாகவே அமைந்தது.இருப்பினும் தமக்கு நிகழப்போகும் அனர்த்தம் எதனையும் அப்பாவியான அவர்களால் அறிந்திருக்க நியாயம் இல்லை.

படையினரின் கெடுபிடிகள் முடிவுக்கு வந்த போது குமுதினி தனது பயணத்துக்கான நேரத்தை தவறவிட்டிருந்தது. இருந்தும் காலை 8.30 மணியளவில் தீவின் இறங்குதுறையில் இருந்து குமுதினி விடைபெற்றது.

ஆர்ப்பரித்தெழுந்த நீலக்கடலலை மெல்லக் கடந்த குமுதினியைப் பார்த்து இறங்குதுறை மௌனமாகி நின்றது.தினமும் நிகழும் இப்பார்வையின் மௌனம் அன்று மட்டும் கனதியாகி இருந்தது.

ஆர்ப்பரித்தெழுந்த கடலின் மடியில் குமுதினி சென்று கொண்டிருந்தது. வெள்ளைக் கொக்குகள் குமுதினிக்கு மேலாக பறந்து தமது பார்வையினை விரித்து விட்டுப் போயின. சூரியனின் ஒளிக்கீற்று அன்று சற்று வெப்பமாக இருந்தது.

நயினைக் கடலில் குமுதினி சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் கடலம்மாவின் இதயத்தைக் குதறியவாறு சிறீலங்காவின் கடல் வல்லூறுகள் வந்து கொண்டிருந்தது. குமுதினியின் கண்களுக்குத் தெரிந்தது.

எதனையுமே விபரீதமாக பார்க்கத் தெரியாத ஏதுமறியா அப்பாவிகளின் பயணம் தொடர்ந்தது. தூரத்தில் தெரிந்த கடல் வல்லூறுகள் இப்போது குமுதினியை நோக்கிப் பாய்ந்து வந்தன. தாய் வல்லூறுக்குத் துணையாக வந்திருந்த இரண்டு வல்லூறுகள் வேகமாக வந்து குமுதினியை வழிமறித்தது.

ஆர்ப்பரித்தெழுந்த கடல் மாதாவின் மடியில் குமுதினி மௌனமாகியது. கடல் மாதாவின் இதயத்தைக் குதறிய தாய் வல்லூறு குமுதினியை நெருங்கி வந்து கொலை வெறிபிடித்த கொடுரமான தனது பார்வையால் குமுதினியை குதறியது. பார்வையின் கொடுரத்தைப் பொறுக்காத கடலம்மா தனது அலைக்கரங்களால் ஓங்கியறைந்து கரைகளில் வந்து மோதினாள். இருந்தும் வல்லூறு பணியாது கோபம் கொண்டு ஆடியது.

நிகழப் போகும் விபரீதத்தினை உணர்ந்து கொண்ட பயணிகள் நிதானிப்பதற்கிடையில் அது நிகழ்ந்தது. தாய் வல்லூறு குமுதினியை வழிமறிக்க குட்டி வல்லூறுகளில் இருந்து கறுப்பு நிற உடையணிந்த பேய்கள் கைக்கோடாரிகள் , வாள் , இரும்புக் கம்பிகள் போன்ற கூரிய ஆயுதங்களுடன் குமுதினியுள் பாய்ந்தனர்.

தமது அன்றாட வாழ்வின் தேவை தேடி கடல் வழியில் பயணிப்பவர்களால் என்னதான் செய்யமுடியும் ? கடல் பேய்களிடமிருந்து தப்பிப்பதற்கு வழி ஏதும் அங்கு இருக்கவில்லை.கடல் ஆர்ப்பரித்துக் கொண்டது. அப்பாவிப் பயணிகளால் ஏதும் இயலாது போனது.தமது இயலாமையினை நாம் அப்பாவிகள் எம்மை ஒன்றும் செய்யாதீர்கள் என அவலக்குரல் எழுப்பினர்.ஆனால் கொலை வெறிபிடித்த கடல் பேய்கள் முன்னால் கதறல்களும் புலம்பல்களும் தோற்றுப் போயின.

கொச்சைத்தமிழின் உச்சரிப்பில் உரக்க நாமம் எழுப்புமாறு கடல் பேய்களிடம் இருந்து கட்டளை பிறந்தது.அப்பாவிப் பயணிகள் கொடுரமான ஆயதங்கள் முன்னால் பெற்றோரும் சுற்றத்தாரும் கூடி பெருமையுடன் சு10ட்டிய நாமத்தினை தயங்கித் தயங்கி கூனிக்குறுகி உச்சரிக்க அந்தக் கொடுரம் நிகழ்ந்தேறியது.

பெற்றோர்கள் முன்னால் பின்ளைகள்,பிள்ளைகள் முன்னிலையில் பெற்றோர்கள்,சகோதரர்கள் முன்னிலையில் சகோதரிகள் துடிக்கத் துடிக்க கொலை வெறி கொண்ட கடற்பேய்களின் கூரிய ஆயதங்களினால் வெட்டியும் குத்தியும் குதறப்பட்டு சரிக்கப்பட்டனர். சரிந்தவர்கள் பலர் கடலுக்கு இரையாகினர்.

குமுதினியில் இருந்து எழுந்த எம் உறவுகளின் மரண ஓலம் எவருக்கும் தெரியாது அன்று வீசிய சோளகக்காற்றுக்குள் சுற்றி சுழன்று போனது.புத்த பெருமானின் வழித்தோன்றல்களால் எம் உறவுகள் குதறப்பட்ட அந்த இறுதிக்கணம் பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் எதைத்தான் எண்ணியிருப்பாளோ....? என்ன நிகழ்கிறது என்பது எதனையும் அறிந்திராத அந்த பிஞ்சு மழலை இந்த உலகத்தினை கண் திறந்து பார்த்து ஏழு மாதங்கள் மட்டுமே நிரம்பியிருந்தது.அந்த மழலையால் கூட அன்பையும் அறநெறியையும் போதித்த புத்த பெருமானின் வாரிசுகளான அவர்களிடமிருந்து எதனையும் பெறமுடியாது போனது. ஏதும் அறியாத இந்த மழலை மேனியும் முக்கூர் முனை கொண்ட ஆயதத்திற்குப் பலியாகிப்போனது.

ஒன்றரை மணி நேரமாக குமுதினியைக் குதறியவர்கள் நடுக்கடலில் கைவிட்டு அங்கிருந்து மறைந்தனர். முன்பெல்லாம் தீவின் மக்களை சுமந்த குமுதினி அன்று அவர்களின் குருதியையும் சுமந்தது. குமுதினியில் இருந்து வடிந்த குருதியினால் கடல் அன்னை சிவப்பாகிப் போனாள்.

உச்சத்தில் நின்றிருந்த சு10ரியனும் நயினையில் வீற்றிருந்த புத்தபகவானும் நடுக்கடலில் நிகழ்ந்த கொடுரத்தினை மனதினுள் புதைத்துக் கொண்டு மௌனமாகினர்.

எப்போதும் காலையிலேயே குறிகட்டுவான் இறங்கு துறையினை வந்தடையும் குமுதினி அன்று வரவில்லை. மதியத்தில் பிறிதொரு படகின் துணையுடன் வந்தடைந்த போதும் அவசர அவசரமாக வெளியேறும் மக்கள் கூட்டத்தினை அன்று காணவில்லை. அவர்கள் சடலங்களாக மட்டுமே வந்து இருந்தனர்.

குமுதினி மௌனமாகிப் போனதால் தனிமையான தொலை தீவில் வாழ்ந்த மக்களுக்கு தமது உறவுகளின் மரணங்கள் கூட கிட்டாது போனது.

பலநூற்றாண்டுகளுக்கு முன்பு தர்மத்தின் முறையிலும் நீதியின் சார்பாகவும் திகழ்ந்து இலங்கையினை ஆட்சி புரிந்த தமிழர்களின் மன்னன் எல்லாளன். அந்த உத்தமனின் நாமத்தினை நினைவாக்கும் எல்லாரா எனும் பெயர் கொண்ட கப்பலினையே இப்பாதக செயலுக்கு சிங்கள அரச பயங்கரவாதம் பயன்படுத்தி எல்லாளனின் நாமத்தில் அழியாத வடுவினையும் பதிவாகியது. சிங்களத்தின் ஆட்சியாளரின் ஆசீர்வாதத்தோடு காரைநகர் கடற்படைத் தளத்தில் இருந்து வந்திருந்த கடல் பேய்களின் கப்டன் யு.ஐ.ஜெயவர்த்தனா தலைமையில் நிகழ்த்தப்பட்ட படுபாதகத்தில் 7 மாதப்பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் 70பது வயது தெய்வானையோடு 36 அப்பாவி பயணிகள் குமுதினியில் சடலங்களாகவும் 71 பயணிகள் மரண காயங்களோடும் மீட்கப்பட்டனர்.

கசப்பான அந்த அனுபவப் பதிவில் உயிர்பிழைத்தோர் நிகழ்ந்த கொடுரங்களை பக்கம் பக்கமாக அறிக்கைகளாக உலகுக்கு வெளிப்படுத்தினர்.ஆனாலும் அடைந்த பலன் ஏதும் அல்ல.

உலகமும் கொடுரங்களாக நோக்காது வெறும் அறிக்கைகளாகவே நோக்கியது. துயர வடுக்களைச் சுமந்த மக்களுக்கு நிகழ்ந்த மற்றும் ஒரு அவலமாக அமைந்தது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் மனங்களில் பதிவாகிய மனது நினைக்க மறுக்கும் அன்றைய நாளினை ஒரு தடவை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம்....

ஓவென ஆர்ப்பரித்தெழும் நயினைக்கடலும் வேகமாக சுழன்றடித்து வீசும் சோளகக் காற்றும் இன்றைய நவீன உலக ஒழுங்கிற்கு புரியாத செய்தி ஒன்றைச் சொல்லுகிறது.

உலகமே உங்களுக்கு குமதினியைத் தெரிகிறதா....?

நீலக்கடல் ஏன் சிவப்பானது எனப் புரிகிறதா...?

கண்திறந்து ஏழு மாதங்களே நிரம்பிய பச்சிளம் பாலகி சுபாஜினியைத் தெரிகிறதா...?


20ஆண்டுகளுக்கு முன்னர் தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாகி உயர்ந்து நின்ற குமுதினி 20 ஆண்டு கடந்தும் இன்னும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியாக உயர்ந்து நிற்கிறது.


நன்றி:ஈழவர் குரல்

 
பாமினி ரிஸ்கி English தமிழம்

திருவள்ளுவர் எழுதி-3 
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.